Monday, October 22, 2012

காத்திருக்கும் நிமிஷங்கள்

உன்னை சந்திக்க காத்திருக்கும்
நிமிஷங்களில் என் கடிகார முட்கள்
கூட  ஊமையாய்
போய் விடுகின்றன


Thursday, January 13, 2011

பூக்குடை

மழை வரும்போது
எந்த பூக்களும்
குடை பிடிப்பது
இல்லை - உன்னைத்  தவிர... 

Saturday, December 19, 2009

உன் மௌனம்

உன் மௌனம் கடலினைப்
போலவே இருக்கிறது
இறங்கி நீந்தவும் முடியாமல்
இரசிக்கவும் முடியாமல்.

கடவுள், நீ, நான்

நீயும்  கடவுளும் ஒன்று தான்
கடவுளுக்கு பிறகு என்னை
குழந்தையாக்கியது நீ மட்டும் தான்.

Thursday, December 17, 2009

நீயும் நானும்

நீயும் நானும் பேசிக்கொள்ளாத
நாட்கள் எல்லாம்
நான் வாழாத நாட்கள்

எனக்கு 
சுவாசிக்கப் பழகிக்கொடுத்த நீ
உன் உதாசீனத்தை தாங்கிக்கொள்ளும்
வித்தையையும் சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

Thursday, November 19, 2009

நிதர்சனம்

நீண்ட இரவில்,  நினைவுகள்...
ஏக்கங்களாக  மாறி
பெருமூச்சாக உடல் தகிக்கும்.

தொண்டை வறண்டு போய்
விழி ஓரம் நனைக்கும்,
வயிற்றில் இனம் புரியாத
கலக்கம் உருண்டோடும்.

கடந்த கால நினைவுகள்
பசுமையாய் மாறி
நெஞ்சை பிசையும் .
இதோடு நின்று போகாதா
இதயம் ?!!
பாழும் நினைவுகள்
பாடாய் படுத்துகின்றன .


நெஞ்சுக்கூட்டின் மேல்
யாரோ ஏறி உட்கார்ந்தது போல்
சிரமமாய் மூச்சு ஓடும்
உயிர் இருத்தலின் அடையாளமாய்
அவ்வப்போது  ஏறி இறங்கும்

என்னுடனேயே எப்பொழுதும்
இருந்த நீ ,
இப்பொழுது எங்கே இருப்பாய்?

அன்று கடைசியாய்
பார்த்த பொழுது இருந்தாயே
அதே மாதிரி தான் இருப்பாயா?
இல்லை காலம் கிழத்து போட்ட
கந்தல் துணியாய்
முகம் சுருக்கங்கள் விழுந்து
காதோரம்  நரை விழுந்து
என்னைப்போலவே முதுமையின்
ஆரம்பப்  படிகளில் இருப்பாயா ?

நீ எப்படி இருப்பாய்
இப்பொழுது ? கேள்வி
குடைந்து எடுக்கும் என்னுள்.
அதே மாதிரி இன்னமும்
வாய் விட்டு சிரிக்கின்றாயா?
 
எங்கேயாவது ஜன நடமாட்டம்
இல்லாத  மலையின் உட்சியிலமர்ந்து
 என்னை நானே விசாரிக்கையில்
என்னுள் எங்கெங்கும் நீ
இருப்பது சந்தோசம் தரும் ....

'என்னங்க தூக்கம் வரலியா ?'
மனைவியின் கேள்வி பாயும் போது
நிதர்சனம் முகத்தில் அறையும்.

கல்லறை

நீ உயிருடன் இருக்கும் பொழுதே
என் இதயத்தில் கல்லறை
நான் தான் உயிர் இல்லா  ஜடமாய்